காதலித்த யுவதியை பார்க்கச் சென்ற இளைஞர் மீது யுவதியின் உறவினர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டதுடன் மொட்டையடித்து அனுப்பியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கலேவல-வீரகலவத்த பகுதியில் கடந்த 28ம் திகதி இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
ஹொரவ்பொத்தானை பிரதேசத்திலிருந்து இரண்டு வருடமாக பழகிய யுவதி வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததையடுத்து பார்வையிட சக நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
இதன்போது அங்கு யுவதியின் உறவினர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தனது தலை முடியை வெட்டி, கண் இமைகளையும் வழித்து, தனக்கு காயம் ஏற்படுத்தியதாக தெரிவித்து குறித்த காதலன் ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளானவர் ஹொரவ்பொத்தானை- நிக்கவெவ சேர்ந்த கபூர் முகம்மட் சாகீர் (19) என தெரியவருகின்றது.
இளைஞர்மீது தாக்குதல் நடத்தியவர் குறித்த பெண்ணின் தந்தை எனவும் அவருடன் பக்கத்து வீட்டார் இருவரும் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்தார்.
தாக்குதல் நடாத்திய யுவதியின் தந்தை கூறுகையில், இரவு நேரத்தில் தனது வீட்டுக்கு வந்து கதவை தட்டியதனால் அவர்மீது தாக்குதல் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான இளைஞர் ஹொரவ்பொத்தானை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்ததாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.