காதல் தோல்வியினால் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது பாட்டி பயன்படுத்தும் மாத்திரைகளை பெருமளவு உட்கொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் மீத்தலாவ மேல் பிரிவில் வசிக்கும் ஹசினிகா பிரபோதனி மாரசிங்க என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
க.பொ.த உயர்தர வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவி, தனது தந்தையின் நண்பரின் மகனுடன் 2 வருடங்களாக காதல் தொடர்பில் இருந்து வந்துள்ளார். தந்தையின் நண்பர் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு குடும்பங்களிற்கிடையிலுமான குடும்ப நட்பு காரணமாக, மஹியங்கனை நண்பர் குடும்பம் கம்பளை, மீத்தலாவ பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம் என ஹசினிகாவின் தந்தை நிஷாந்த மாரசிங்க தெரிவித்துள்ளார்.
அப்போது நண்பரின் மகன் தனது மகளுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தியதாக கூறுகிறார். அண்மையில் அந்த மாணவிக்கு வந்த தொலைபேசி அழைப்பில், அவரது காதலனுக்கு வேறு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு காதலனின் புதிய காதலியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மாணவியின் காதல் தொடர்பை மறந்து விடும்படி மிரட்டியுள்ளார்.
இதனால் விரக்தியடைந்த மாணவி உணவு எதுவும் உட்கொள்ளாமல் சில நாட்கள் இருந்ததுடன், தனது பாட்டி பயன்படுத்தும் நீரிழிவு, இரத்த அழுத்த மாத்திரைகளை பெருமளவில் உட்கொண்டுள்ளார்.
இதனையடுத்து மாணவி, உடனடியாக கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி நளின் மெதிவக்க பிரேத பரிசோதனையை மேற்கொண்டதுடன், மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டதால் ஏற்பட்ட மாரடைப்பினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் நீதி வைத்திய அதிகாரி சாந்த ஹேரத் தெரிவித்தார்.