சட்டவிரோத மணல் அகழ்வுகளால் மாவட்டத்திலிருக்கும் மிகப்பெரிய வளத்தை நாங்கள் இழக்க முடியாது, இதனால் ஏற்படும் அழிவுகள் ஆபத்துக்கள் மிக அதிகம். எனவே அனைவரும் இதில் பொறுப்புடன் செயற்படவேண்டும் என மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (24) பகல் 2மணிக்கு மாவட்ட செயலக மண்டபத்தில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கருத்துரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சட்டவிரோத மணல் அகழ்வுகளால் இருக்கின்ற மிகப்பெரிய வளத்தை நாங்கள் இழக்க முடியாது. இதனால் ஏற்படும் அழிவுகள் ஆபத்துக்கள் மிக அதிகம். எனவே அனைவரும் இதில் பொறுப்புடன் செயற்படவேண்டும்.
அதிகாரிகளாகிய நாங்கள் இன்று இங்கே கடமையில் இருப்போம், சில வருடங்களுக்குள் சென்று விடுவோம். ஆனால் இந்த சமூகமும் இந்த மக்களும் பிரதேசத்திலேயே தொடர்ந்தும் இருக்கப் போகின்றார்கள்.
ஆகவே இந்த சட்டவிரோத மணல் அகழ்வுகளைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும். குறிப்பாக இங்கே இருக்கின்ற ஒரு பெரிய வளமான இரணைமடு குளத்தின் கீழ் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் எதிர்காலத்தில் பெரிய ஒரு வளத்தை நாங்கள் இழந்து போக முடியாது.
இதனால் ஆபத்துக்களும் அழிவுகளும் அதிகமாக இருக்கும். எனவே சமூகத்தினுடைய ஒத்துழைப்பும் பங்களிப்பும் மிக மிக அவசியமானது. அந்த அடிப்படையிலேயே குறிப்பாக முதற்கட்டமாக 5 இடங்களில் இராணுவ காவலரண்களை அமைத்து அதன் மூலம் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அதற்கு கமக்காரர் அமைப்புகள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் என்பன இடங்களை அடையாளப்படுத்தி காவலரண்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.