கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் தாயும் மக்களும் தீயில் எரிந்து கருகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவ இடத்தை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் பார்வையிட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11 .50 மணியளவில் 47 வயதுடைய ஆனந்தராசா சீதேவி என்ற 07 பிள்ளைகளின் தாயாரும் அவரது மகளான 17 வயதுடைய லக்சிகா ஆகியோர் தீயில் எரிந்து கருகிய நிலையில் அடையாளம் காணப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று தருமபுர பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தருமபுரம் பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் குறித்த பகுதியை பார்வையிட்டார்.
குறித்த சடலத்தைப் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளும் அதேவேளை பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்ட நிலையில், சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அத்துடன் அப்பகுதியில் ஒரு போத்தலில் பெற்றோலும் மற்றும் ஒரு கத்தி, ஒரு தொலைபோசி என்பனவற்றைத் தடையில் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.