இலங்கையில் திருமணம் செய்து கொள்வதில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத்தினால் புலம்பெயர் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர் பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெற வேண்டும் என அண்மையில் புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மற்றும் இலங்கையின் வட பகுதியை சேர்ந்த 50 இற்கும் மேற்பட்ட பெண்களின் திருமணம் தடைப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள புதிய சட்டம் காரணமாக டயஸ்போரா செயற்பாட்டாளர்களின் அடையாளங்கள் இலங்கை புலனாய்வாளர்களுக்கு கிடைத்துள்ளதாக லண்டன் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத செயற்பாடு, போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் இந்த புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த சட்டத்திற்கமைய வெளிநாட்டவர்கள் தங்கள் அடையாளங்களை பாதுகாப்பு அமைச்சிற்கு வெளிப்படுத்த வேண்டும்.
இதுவரையில் அவ்வாறான சட்டம் செயற்படுத்தாமையினால் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலைமை புலனாய்வு பிரிவிற்கு ஏற்பட்டதாக அந்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.