துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் 30% அத்தியாவசிய உணவுக் கொள்கலன்களை விடுவித்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வங்கிகள் பல கட்டங்களாக டொலர்களை வழங்குவதால் துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிப்பது தாமதமாகியுள்ளதாக தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் தெரிவித்திருந்த போதிலும் அதற்கான ஏற்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக வங்கிகள் டொலர்களை வழங்கும் முறையின் பிரகாரம் கொள்கலன்கள் விடுவிக்கப்படுவதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்படும் தாமதத்துடன், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, வங்கிகளினால் உடனடியாக டொலர்கள் வழங்கப்பட்டால் துறைமுகத்தில் இருந்து கொள்கலன்களை விரைவில் விடுவிக்க முடியும் எனவும், எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் தேவையான ஏற்பாடுகளை மத்திய வங்கி மேற்கொள்ளும் என எதிர்ப்பார்ப்பதாக அத்தியவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை சுங்கப் பிரிவினரிடம் வினவியபோது, துறைமுகத்தில் தேங்கியிருக்கும் உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பது தமது பொறுப்பல்ல என சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.
இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளை அடுத்து கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான ஆவணங்கள் கிடைத்த பின்னரே சுங்கம் கொள்கலன்களை விடுவிக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.