கர்ப்பிணித் தாய்மாருக்கு வழங்கப்படும் திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான சோளத்தின் அளவைப் பெற முடியாததால் திரிபோஷா உற்பத்தியில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2021 ஆம் ஆண்டு திரிபோஷா உற்பத்திக்காக வழங்கப்படக் கூடிய சோளத்தின் அளவு 570 மெட்ரிக் தொன் என மாவட்ட செயலாளர்கள் திரிபோஷ நிறுவனத்துக்கு அறிவித்துள்ளனர்.
அம்பாறை, மொனராகலை மற்றும் அனுராதபுரம் மாவட்ட செயலாளர்கள் வழங்கிய அறிக்கைகளிலிருந்து அந்தத் தொகை ஒரு வாரத்துக்கு மட்டுமே போதுமானது என கூறப்படுகின்றது.
அதேவேளை தினந்தோறும் திரிபோஷ உற்பத்திக்குத் தேவையான சோளத்தின் அளவு 70 மெட்ரிக் தொன் ஆகும். தேவையைப் பூர்த்தி செய்ய முடியாததால் 10,000 மெட்ரிக் தொன் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய ஓகஸ்ட் 24ஆம் திகதி அரசு முடிவு செய்த நிலையில் இதுவரை 2500 மெற்றிக் தொன் சோளம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான 720 மெற்றிக் தொன் பால் மாவை வழங்க முடியவில்லை என கூறப்படும் அதேவேளை, பால் மாவின் விலை கிலோவுக்கு 225 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பால் மாவை 1145 ரூபாவுக்கு வழங்க முடியும் என மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.