விடுதலைப் புலிகள் காலத்தில் புதைத்திருக்கலாம் எனும் சந்தேகத்தில், தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரு பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு , சுதந்திரபுரம் பகுதியில் புதையலை தேடி அகழ்வு நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வு நடவடிக்கைகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி .சரவணராஜா முன்னிலையில் பொலிஸாரால் இன்று மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத்தை நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய தோண்டி எடுப்பதற்கு முன்னதாக அமைச்சுக்களின் செயலாளர்கள் இருவர் இரகசியமாக அதனை எடுக்க முயற்சித்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
அந்த சம்பவம் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் குறித்த அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை நீதவானின் உத்தரவிற்கு அமைய கடந்த நவம்பர் 25ம் திகதி தோண்டி எடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், மாவீரர் தின நிகழ்வுகளினால் அந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்ட நிலையிலேயே இன்றையதினம் மேற்படி அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த அகழ்வு பனி ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்கனவே இரண்டு குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில் அக்குழிகள் 05 அடிக்கு மேற்பட்ட ஆழம் கொண்ட குழிகளாகவும் காணப்படுவதோடு நீர் நிரம்பிய நிலையில் காணப்படுகின்றது.
இதனையடுத்து முதற்கட்டமாக குழிகளில் உள்ள நீரைவெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு இயந்திரங்களை கொண்டு அகழும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அகழ்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அகழ்வு இடம்பெறும் இடத்தில் பொலிஸார் ,விசேட அதிரடி படையினர் ,இராணுவத்தினர் ,புலனாய்வாளர்கள் , உள்ளிட்ட தரப்புகள் பிரசன்னமாகியிருந்தனர்.
இதேவேளை பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயலாளர்கள் இருவர் குறித்த தங்கத்தை எடுக்க ரகசியமாக முயற்சித்துள்ளனர்.
இதற்காக அவர்கள் இருவரும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஒத்துழைப்பு கோரப்பட்ட போதிலும் அதற்கு அவர் இணங்க மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது