டி20 உலகக் கிண்ண போட்டியின் இறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. டி20 உலகக் கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு இது முதல் செம்பியன் பட்டமாகும். இதற்கு முன் 2010 இல் இறுதிச்சுற்றில் தோல்வியடைந்தது.
டுபாயில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூஸிலாந்து 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்கள் அடித்தது. அடுத்து ஆடிய அவுஸ்திரேலியா 18.5 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்கள் எடுத்து வென்றது.
நியூஸிலாந்து இன்னிங்ஸில் பவுண்டரி, சிக்ஸா்களாக விளாசி அணியின் ஸ்கோரை அட்டகாசமாக உயா்த்தினாா் தலைவர் வில்லியம்சன். 48 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 85 ஓட்டங்கள் எடுத்தார். ஆஸி. அணியின் ஹேசில்வுட் அற்புதமாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 16 ஓட்டங்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
அவுஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸில் டேவிட் வார்னர் 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்களும் மிட்செல் மார்ஷ் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்கள். ஆட்ட நாயகன் விருதை மிட்செல் மார்ஷும் தொடர் நாயகன் விருதை டேவிட் வார்னரும் வென்றார்கள்.
டி20 உலகக் கிண்ண ஆட்ட நாயகன்
2007 – இர்பான் பதான்
2009 – சாஹித் அப்ரிடி
2010 – கிரைக் கீஸ்வெட்டர்
2012 – மர்லான் சாமுவேல்ஸ்
2014 – குமார் சங்கக்காரா
2016 – மர்லான் சாமுவேல்ஸ்
2021 – மிட்செல் மார்ஷ்
டி20 உலகக் கிண்ண தொடர் நாயகன்
2007 – சாஹித் அப்ரிடி
2009 – தில்ஷன்
2010 – கெவின் பீட்டர்சன்
2012 – ஷேன் வாட்சன்
2014 – விராட் கோலி
2016 – விராட் கோலி
2021 – டேவிட் வார்னர்