நாட்டில் டெங்கு நோய், தொற்று நோயாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
டெங்கு வைரஸின் நான்கு வகைகளும் தற்போது இலங்கையில் பரவியுள்ளமை அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வீட்டுச் சூழல் உட்பட நுளம்புகள் பெருகும் அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்திருக்குமாறும் பொதுமக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் தற்போது 23,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் டெங்கு மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன இணைந்து அண்மையில் நடத்திய ஆய்வில், கட்டுமானப் பகுதிகளிலேயே டெங்கு நுளம்பு குடம்பிகள் அதிகளவில் உருவாவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு நான்கு வகையான டெங்கு வைரஸ் வகைகள் தொற்றுகின்றன. அவற்றில் இரண்டாவது மற்றும் மூன்றாவதுஎன அடையாளம் காணப்படுகின்ற வைரஸ் வகைகள் அதிகளவில் தொற்றுவதாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு மேலும் தெரிவித்துள்ளார்.