கனடாவுடனான அமெரிக்க தரைவழி எல்லைகள் 20 மாதங்களின் பின்னர் நேற்று திறக்கப்பட்ட நிலையில் அதிகளவு கனடியர்கள் நேற்று எல்லைகளில் திரண்டு அமெரிக்காவுக்குப் பயணம் செய்தனர்.
ப்ளூவாட்டர் பிரிட்ஜ், மிச்சிகன் அருகே உள்ள சர்னியா, ஒன்டாரியோ மற்றும் கியூபெக் அருகே உள்ளவை உள்ளிட்ட அமெரிக்காவுடனான எல்லைச் சாவடிகளில் நேற்று அதிகளவான கனடியர்கள் திரண்டிருந்து அமெரிக்காவுக்கு பயணம் செய்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை அடுத்து 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதி உட்பட 33 நாடுகளில் இருந்து அமெரிக்கா வர கடும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல் செய்யப்பட்டன.
அத்துடன், அண்டை நாடுகளாக கனடா மற்றும் மெக்சிகோ உடனான எல்லைகளையும் அமெரிக்கா மூடியது. இநநிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நேற்று சர்வதேச நாடுகளின் பயணிகளுக்கான விமானப் பயணங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
அத்துடன், கனடா, மெக்சிகோ உடனாக தரைவழி எல்லைகளும் மீண்டும் திறக்கப்பட்டன. எல்லை திறக்கப்பட்டதை அடுத்து நீண்ட காலம் தமது அன்புக்குரியவர்களைப் பிரிந்திருந்தவர்கள் மகிழ்ச்சியுடன் ஒன்றிணைந்தனர்.
எல்லைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா – கனடாவுக்குள் நுழையும் இரு நாட்டவர்களும் பரஸ்பர பயணங்களில்போது தடுப்பூசி போட்டிருக்கவேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட அண்மையில் எடுக்கப்பட்ட சான்றுகளையும் கையளிக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் தொடர்ந்தும் அமுலில் உள்ளன.