ஆப்கானிஸ்தான் கரப்பந்து அணியை சேர்ந்த வீராங்கனை ஒருவர் கொடூரமான முறையில் தலீபான்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் பயங்கரவாதிகள் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். ஆட்சி அதிகாரம் தங்கள் வசமனதாக அறிவித்த தலீபான்கள் புதிய அரசையும் அமைத்து உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அனைத்து பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் மாணவிகளுக்கு கல்வி மறுக்கப்பட்டு வருகிறது. அல்லது அவர்கள் தனியாக பிரிக்கப்படுகிறார்கள். இது சர்வதேச அளவில் விவாதப்பொருளாகியுள்ளது. பெண்கள் ஆசிரியப் பணி செய்யவும் அனுமதிக்கப்படவில்லை.
தலீபான்கள் மேலும் பல்வேறு சட்டதிட்டங்களை அறிவித்து வருகிறார்கள். தற்போது ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் மகளிர் கரப்பந்து அணியை சேர்ந்த இளம் பெண் ஒருவரின் தலையை தலீபான்கள் துண்டித்து கொலை செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
அணியின் ஒரு பயிற்சியாளர் பாரசீக ஊடகத்திடம் இதனை தெரிவித்து உள்ளார். இது குறித்து பேட்டி அளித்த பயிற்சியாளர் கூறியிருப்பதாவது, தலீபான்களால் மஹ்ஜபின் ஹகிமி என்ற தேசிய ஜூனியர் பெண் வீராங்கனை கொல்லப்பட்டார். ஆனால் இந்த கொடூரமான கொலை பற்றி யாரும் அறியவில்லை. ஏனெனில் இதைப் பற்றி பேச வேண்டாம் என்று அவளுடைய குடும்பம் அச்சுறுத்தப்பட்டு உள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் தலீபான்கள் முழுமையான கட்டுப்பாட்டை எடுப்பதற்கு முன்பு அணியின் இரண்டு வீரர்கள் மட்டுமே நாட்டிலிருந்து தப்பிக்க முடிந்தது. மஹாஜபின் ஹகிமி பல துரதிருஷ்டவசமான பெண் விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருந்தார்.
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைபற்றியதை அடுத்து பெண் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு வேட்டையாட முயன்றனர். ஆப்கானிஸ்தான் மகளிர் கரப்பந்து அணியின் உறுப்பினர்களை தேடுவதில் அவர்கள் அதிக ஈடுபாடு காட்டினார்கள். ஏன் என்றால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்று, கடந்த காலங்களில் அவர்கள் ஊடகங்களில் தோன்றினர்.
கரப்பந்து அணியின் அனைத்து பெண் விளையாட்டு வீரர்களும் மோசமான சூழ்நிலையிலும் விரக்தியிலும் பயத்திலும் உள்ளனர், அனைவரும் தப்பி ஓடி மறைந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, என்று அதில் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலீபான்களிடம் வீழ்ச்சி அடைவதற்கு முன்னர் காபூல் நகராட்சி கரப்பந்து கிளப்பில் மஹ்ஜபின் விளையாடி வந்தார். மேலும் அவர் கிளப்பின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக இருந்தார். கடந்த வாரம், பிபா மற்றும் கத்தார் அரசு ஆப்கானிஸ்தானின் தேசிய கால்பந்து அணி உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 100 வீராங்கனைகளை வெளியேற்றினர்.