கடந்த 30 ஆண்டுகளாக, ரஷ்யாவில் பல்வேறு பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த 52 வயது நபரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 60 க்கும் மேற்பட்ட பெண்களை, இவர் பாலியல் வன்புணர்வு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றம்சாட்டப்பட்ட இந்த நபரின் ஆணுறுப்பை நீக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பகுதியைச் சேர்ந்தவர் பாவெல் ஷுவலோவ். 52 வயதான இவர், அப்பகுதியில் புல்டோசர் ஓட்டுநராக உள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
கடந்த 1992 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை, பாவெல் ஷுவலோவ் 60 க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
அந்த நபர் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அந்த நபரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், பாதிக்கப்பட்ட பல பெண்கள் அந்த நபருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க மறுத்துவிட்டனர். இத்தனை ஆண்டுகள் காவல்துறையினர் கைகளில் சிக்காமல் தப்பித்தவர், மீண்டும் வந்து எதாவது செய்துவிடுவார் என்ற அச்சத்தில் பெண்கள் வாக்குமூலம் அளிக்க மறுத்துள்ளனர்.
பெண்களைக் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்யும் இந்த நபர், அவர்கள் மீதே படுத்துப் பல மணி நேரம் குறட்டைத் தூங்கிவிடுவார் என பாதிக்கப்பட்ட பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். 150 கிலோ எடையுள்ள இந்த நபர் மேலே படுத்திருப்பதால், பாதிக்கப்பட்டும் பெண்களால் தப்பிக்க முடியாமல் சிக்கி தவித்துள்ளனர்.
பாலியல் வன்புணர்வு செய்த பெண்களில் சிலரை குற்றம்சாட்டப்பட்ட நபர் கொலையும் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
பொதுவாக, கத்தியைக் காட்டி மிரட்டும் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர், அவர்களை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுவதால், தங்களால் தப்ப முடியாவில்லை என் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகின்றனர்.
அப்படித் தப்ப முயன்றவர்களையும் இந்த நபர் அடித்துத் துன்புறுத்தியுள்ளார். பாதிக்கப்படும் பெண்கள் மீதே படுத்து தூங்கும் இந்த நபர், கண் விழித்த பிறகு, அவர்களை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடுவார் என்ற போலீசார் குறிப்பிட்டனர்.
இந்த வழக்கில் சுமார் 15,000 க்கும் மேற்பட்டோருக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டுள்ளது. 3000 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி விசாரணையில், தான் செய்த குற்றத்தை இந்த நபர் ஒப்புக்கொண்டார். இரண்டு கொலை மற்றும் 2 பாலியல் வன்புணர்வு சம்பவங்களில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ள இந்த நபருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.