அமெரிக்காவின் வாஷிங்டன் மிருகக்காட்சி சாலையில் உள்ள புலிகள் மற்றும் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.
உலகின் பல பகுதிகளில் உள்ள மிருகக்காட்சி சாலை விலங்குகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது சோதனையின் மூலம் கண்டறியப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் ஆறு ஆப்பிரிக்க சிங்கங்கள், சுமத்ரான் புலி மற்றும் இரண்டு அமுர் புலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சோம்பல், இருமல் மற்றும் தும்மலின் அறிகுறிகளை கொண்டிருந்த புலிகள் மற்றும் சிங்கங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதன் மூலம் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
பராமரிப்பாளரிடமிருந்து விலங்குகளுக்கு கொரோனா தொற்று பரவியிருக்கலாம என மிருகக்காட்சிசாலையின் தலைமை கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஸ்பெயினின் பாா்சிலோனா, இலங்கை மற்றும் அமெரிக்காவின் பிராங்க்ஸ் நகரங்களில் உள்ள உயிரியல் பூங்காக்களில் சிங்கங்கள் மற்றும் புலிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் தெலங்கானா, செங்கல்பட்டு வண்டலூர், ஹைதராபாத்தில் உள்ள விலங்கியல் பூங்காக்களின் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.