வைத்தியசாலையில் இருந்து எடுத்துவரப்பட்ட பெண்ணின் சடலம் ஆணா மாறிய சம்பவமொன்று மொனராகலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மூதாட்டியின் சடலத்திற்குப் பதிலாக அந்நிய ஆணின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ளது.
பதுளை, அல்பொத்த, கொலனிய பகுதியைச் சேர்ந்த ஜூபைதா உம்மா (75) என்ற மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரது சடலத்திற்குப் பதிலாக ஒரு ஆணின் சடலத்தை வைத்தியசாலை நிர்வாகம் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளது. உறவினர்கள் அந்தச் சடலத்தை அடையாளம் காணாமல் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்ற உறவினர்கள், இஸ்லாமிய மத சடங்குகளின்படி அடக்கம் செய்வதற்கு முன் முகத்தைப் பார்த்தபோது, அது பெண்ணுக்குப் பதிலாக ஆணின் சடலம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, உறவினர்கள் அந்த ஆணின் சடலத்தை மீண்டும் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று ஒப்படைத்தனர். இறுதியில், உயிரிழந்த மூதாட்டியின் சரியான ஜனாசா கண்டறியப்பட்டு, அன்றைய தினமே அடக்கம் செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையின் நிர்வாகப் பிரிவிடம் கேட்டபோது, “சடலங்களை அடையாளம் கண்டு பெற்றுக்கொள்வது உறவினர்களின் பொறுப்பாகும்” என்று பதிலளித்துள்ளனர். குறித்த 12ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

