அனுராதபுரம் – விமான நிலைய வீதியில் இடம்பெற்ற விபத்தில், அனுராதபுரத்தை சேர்ந்த 32 வயதுடைய கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் அநுராதபுரம் மத்திய நுவரகம்பலாத பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் கிராம உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையும் உயிரிழப்பு
கவரக்குளம் பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கி, குறித்த கர்ப்பிணி பெண் மற்றொரு பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த சிறிய லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் கிராம உத்தியோகத்தரும், பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பாக லொறியின் ஓட்டுநரான 27 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கவரக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

