இலங்கையில் அண்மைக்காலமாக அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த ரூபாயின் மதிப்பு, கடந்த வியாழக்கிழமை முதல் மீண்டும் படிப்படியாக வலுவடையத் தொடங்கியுள்ளதாக Advocata நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நாணய மாற்றுச் சந்தையின் தற்போதைய நிலவரம் குறித்து கருத்து வெளியிடும் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
“டொலரின் மதிப்பு மேலும் உயர்ந்து 380 முதல் 400 ரூபாய் வரை செல்லக்கூடும் என்று பலர் எதிர்பார்த்திருந்தனர். இப்போது அந்தப் போக்கு தலைகீழாக மாறியுள்ளது.
டொலருக்கான மாற்று வீதம்
மே மாத தொடக்கத்தில் ரூபாய் தொடர்ந்து சரிவடைந்து வந்ததால், டொலருக்கான மாற்று வீதம் மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஏற்றுமதியாளர்கள் தங்களது டொலர்களை ரூபாயாக மாற்றுவதைத் தாமதப்படுத்தியுள்ளனர்.
ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சியடையும் போது, தங்களது டொலர்களை உடனடியாக மாற்றினால் நட்டம் ஏற்படும் என்று ஏற்றுமதியாளர்கள் எண்ணத் தொடங்கினர்.
இதன் காரணமாக, கடந்த வியாழக்கிழமையளவில் சந்தைக்கு வரும் டொலர்களின் அளவு மிகக் குறைவாக இருந்தது.
அதேநேரம், ரூபாய் மேலும் வீழ்ச்சியடையும் என்று பயந்த இறக்குமதியாளர்கள் டொலர்களைப் பெற்றுக்கொள்ள அவசரப்பட்டனர். வாகன இறக்குமதி வரிகளும் அதிகரிக்கப்பட்டது. கடன் கடிதங்களை இறக்குமதியாளர்கள் விரைவாகத் திறந்ததும் சந்தையில் டொலருக்கான தேவையை மேலும் அதிகரித்தன.
அதிகரிப்பின் பின்னணி
இந்த இக்கட்டான சூழ்நிலையை அடுத்து, கடந்த வியாழக்கிழமை மாலை மத்திய வங்கி ஆளுநர் மற்றும் வர்த்தக வங்கிகளின் பிரதிநிதிகளுக்கு இடையே அவசரக் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, ஏற்றுமதியாளர்கள் தங்களது ஏற்றுமதி வருவாயை ரூபாயாக மாற்றுவதற்கு வழங்கப்பட்டிருந்த 90 நாட்கள் கால அவகாசம், 30 நாட்களாகக் குறைக்கப்படலாம் என்ற பொய்யான தகவல் வெளியானது.
இதன் காரணமாக, மாற்று வீதம் சாதகமாக இருக்கும்போதே தங்களது டொலர்களை ரூபாயாக மாற்ற ஏற்றுமதியாளர்கள் வெள்ளிக்கிழமை விரைந்தனர்.
மத்திய வங்கி தனது கையிருப்புப் பணத்தை நேரடியாகச் சந்தையில் பயன்படுத்தாமல், டொலர் வரவை அதிகரிக்கக் கையாண்ட ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக இது இருக்கலாம். வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் வெளிநாட்டுப் பணப் பிரேரணைகள் அதிகமாக வரும்.
இதன் போது கடன் கடிதங்களுக்கான தேவை குறைவாகக் காணப்படும். இதனால் வெள்ளிக்கிழமையன்று சந்தையில் டொலர் புழக்கம் அதிகரித்து, ரூபாயின் மதிப்பு கணிசமாக உயர்ந்ததுடன், அது தற்போதும் தொடர்ந்து நீடித்து வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்தகட்ட நிதி வரவு குறித்த எதிர்பார்ப்புகளினாலும், நாட்டில் டொலர் பற்றாக்குறை இல்லை என்ற நம்பிக்கையினாலும் சந்தை நிலவரம் தற்போது சீரடைந்துள்ளதாக தனநாத் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

