இன்னும் சில மாதங்களில் ஐரோப்பாவின் 53 நாடுகளில் மேலும் 7 லட்சம் போ் கொரோனாவுக்கு பலியாகும் அபாயம் நிலவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் ஐரோப்பியப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஐரோப்பாவில் தற்போதைய கொரோனா நிலவரம் தொடா்ந்தால், குளிா்காலம் கடந்து மாா்ச் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்துக்குள் அந்தப் பிராந்தியத்தில் கூடுதலாக 7 லட்சம் போ் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பாா்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான மக்களின் நோயெதிா்ப்புத் திறன் குறைந்து வருவதற்கான ஆதாரங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
அதனைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் ஒரு பகுதியாக இன்னும் அதிகமானவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
இரு தவணை கொரோனா தடுப்பூசிகளுக்குப் பிறகு 3 ஆவதாக ‘பூஸ்டா்’ தடுப்பூசிகளைப் பெறுவதற்கு, 60 வயதுக்கு மேற்பட்ட சுகாதாரப் பணியாளா்கள் போன்ற கொரோனா மரண அபாயம் நிறைந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய மண்டல இயக்குநா் ஹன்ஸ் கிளக் கூறுகையில், ‘ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் கொரோனா நிலவரம் மிக மோசமாக உள்ளது. இதுதவிர, நாம் குளிா்காலத்தை எதிா்நோக்கியுள்ளோம். அது, கொரோனா பரவல் அபாயத்தை மேலும் அதிகரிக்கும். எனினும், நாம் சுகாதாரப் பணியாளா்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்’ என்றாா்.
ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகமும், ‘பூஸ்டா்’ தடுப்பூசிகள் செலுத்தப்படுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஏற்கெனவே இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு, முழுமையான நோயெதிா்ப்பு ஆற்றல் கிடைத்த பிறகும், அந்த ஆற்றலை மேலும் ஊக்கப்படுத்துவதற்காக ‘பூஸ்டா்’ தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இதனால், முதல் இரு தவணை கொரோனா தடுப்பூசி தேவைப்படும் பலருக்கு அந்தத் தடுப்பூசிகள் கிடைக்காமல் போவதாகவும் அதனைத் தவிா்க்க இந்த ஆண்டு முழுவதும் பூஸ்டா் தடுப்பூசிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறி வருகிறது.
ஐரோப்பாவில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 1,386,773 போ் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனா். இதுவரை 70,925,345 பேருக்கு அந்த அந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் கொரோனா பலி
ரஷ்யா 266,579
பிரிட்டன் 143,972
இத்தாலி 133,247
பிரான்ஸ் 118,555
ஜொ்மனி 99,817
ஸ்பெயின் 87,832
உக்ரைன் 82,318
போலந்து 81,228
ருமேனியா 55,386
ஹங்கேரி 33,343
பிற நாடுகள் – 284,496
மொத்தம் – 1,386,773