கடந்த ஆண்டில் 25 நடைபாதை திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
2021 ஆம் ஆண்டில், 30 நடைபாதைகளை நிறுவுவதற்கான இடங்கள் கண்டறியப்பட்டன, அவற்றில் 25 பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த டிசம்பர் 25ஆம் திகதிக்குள் அந்த அனைத்துப் பாதைகளையும் கட்டி முடிக்க நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முடிந்துள்ளது. இதற்காக செலவிடப்பட்ட தொகை 1,263 மில்லியன் ரூபாவாகும்.
கெஸ்பேவ, பலாங்கொடை, அம்பாறை, ரம்புக்கனை, திருகோணமலை, பலப்பிட்டிய, கம்பஹா, குருநாகல், மாத்தளை, லுணாவ, இங்கிரிய, மட்டக்களப்பு, கம்புருகமுவ, நுவரெலியா, யக்கலை, யாழ்ப்பாணம் மற்றும் பெதுருதுடுவ ஆகிய இடங்களில் இந்தப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
யக்கல விக்கிரமாராச்சி பல்கலைக்கழகத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட பாதைக்கு ´விக்கும் உயன´ என பெயரிடப்பட்டுள்ளது. அதற்காக செலவிடப்பட்ட தொகை 65 மில்லியன் ரூபாவாகும் . இங்கு சுமார் 30 வாகனங்கள் நிறுத்தக்கூடிய வாகன நிறுத்துமிடமும் கட்டப்பட்டுள்ளது. வெள்ள நீரோட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தப் பிரதேசத்தில் ஆயுர்வேத வலயமொன்றை நிறுவ யோசனை இருப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார்.
இது தொடர்பில் உள்ளுர் மருத்துவ அமைச்சுடன் பல கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, ராகம, பேரலந்த நடைபாதையின் 3ஆம் கட்ட நிர்மாணப் பணிகளை இவ்வருடம் விரைவாக முடிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பேரலந்த நடைபாதையின் முதலாவது மற்றும் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், இதற்காக 208 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையும் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனமும் இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. இங்கு 3ம் கட்டமாக சிறுவர் பூங்கா, உணவகம், மற்றும் வெளிப்புற உடற்பயிற்சி மையம் ஆகியவை கட்டப்பட உள்ளன.
தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள இவ்வாறான திட்டங்களை விரைவில் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சமூகத்திற்கு ஆரோக்கியமான பிரஜைகளை உருவாக்கும் நோக்கில் இவ்வாறான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.