யாழ்ப்பாணம், குருநகர், மற்றும் சிலாவதுரை, அரிப்பு, ஆகிய கரையோர பிரதேசங்களில் கடற்படையினரால் செப்டம்பர் 09 மற்றும் 10ம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1,136 கிலோ கிராமுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சளுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, யாழ் குருநகர் கடனீரேரி பகுதிகளில் இம்மாதம் 09ம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது, 12 சாக்கு பொதிகளில் சுமார் 617 கிலோ மற்றும் 450 கிராம் உலர்ந்த மஞ்சளை கைப்பற்றப்பட்டது. அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
மேலும், சிலாவத்துறை அரிப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இதே போன்ற மற்றுமொரு நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினரால் 14 சாக்கு பொதிகளில் பொதி செய்யப்பட்டு இருந்த 519 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டதுடன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டார்.
இம்மாதம் 9,10ம் திகதிகளில் தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட இந்த இரு நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 1,136 கிலோகிராமிற்கும் மேற்பட்ட உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் பாசூர், வலைப்பாடு மற்றும் சிலாவத்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25 தொடக்கம் 45 வரையான வயதுடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குருநகர் பகுதியில் கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் படகு சகிதம் சந்தேகநபர்கள் மூவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை, சிலாவத்துறையில் கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் சகிதம் சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கொவிட் பரவலைத் தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.