வெனிசுலாவில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெருஞ்சேதம் ஏற்பட்டு மக்கள் அவதியுறும் நிலையில் மீண்டும் அங்கு மற்றுமொரு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானது. தலைநகர் கராகஸ் மற்றும் மராகாய் நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை
இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என தகவல் வெளியானது.
வெனிசுலாவின் வடக்குப் பகுதியில் உள்ள மராகே நகருக்கு வடமேற்கே 61 கிலோமீட்டர் (36 மைல்) தொலைவில் சமீபத்திய நிலநடுக்கம் ஏற்பட்டதாக, நிலநடுக்கங்களைக் கண்காணிக்கும் அமைப்பான EMSC தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கங்களுக்குப் பிறகும் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நிலநடுக்கங்களில் உயிரிழந்தோர்
இதேவேளை வெனிசுலா நிலநடுக்கங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 920 ஆக உயர்ந்துள்ளது. 3,300-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் அவசரநிலை பிறப்பிக்கப்படுவதாக அறிவித்த இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், மக்கள் அனைவரும் விழிப்புடனும், பாதுகாப்புடனும் இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

