மட்டக்களப்பு மாவட்ட கச்சேரியில் இடம்பெற்ற 2022ம் ஆண்டுக்கான சிறுபோக வேளாண்மை செய்கையின் முன்னோடிக் கூட்டத்தில் பசுமை விவசாயத்திக்கான உள்ளீடுகள் உரிய காலத்தில் வழங்கப்படும் என தீர்மானிக்காது, திகதி தீர்மானிக்கப்பட்டதை எதிர்த்து கடும் கண்டனம் தெரிவித்து விவசாயி அமைப்புகள் கூட்டத்தில் இருந்து இடைநடுவில் வெளியேறியதாக விவசாய அமைப்புக்கள் தெரிவித்தனர்.
2022ம் ஆண்டுக்கான சிறுபோக வேளாண்மை செய்கையின் முன்னோடிக் கூட்டம் நேற்று இடம்பெற்றபோது அதில் இருந்து வெளியேறிய விவசாயிகள் மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு முன் ஒன்று கூடிய நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே குறித்த விடயத்தை கூறியுள்ளனர்.
2022ம் ஆண்டுக்கான சிறுபோக வேளாண்மை செய்கையின் முன்னோடிக் கூட்டம் அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நேற்று காலை 9 மணிக்கு கச்சேரி மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது விவசாயிகளின் பிரச்சினைகள் ஆராயப்பட்டது. விவசாயிகளான எங்களது முக்கியமான பிரச்சினையான விவசாய நடவடிக்கையை மேற்கொள்வதற்கான பசுமை விவசாயத்துக்கான உள்ளீடுகளை கடந்த வருடம் சிறந்தமுறையில் வழங்கவில்லை.
இதனால் ஒரு ஏக்கருக்கு 50 மூடை நெல்லை பெறவேண்டிய விவசாயிகள் 8 மூடை நெல்லை பெறவேண்டி ஏற்பட்டது. அதேவேளை பாதிக்கப்பட்ட சுமார் 2500 விவசாயிகளுக்கு மானியங்கள் இதுவரை கொடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் சிறுபோக வேளாண்மையை செய்ய ஆயத்தங்கள் எடுத்தபோதும் உள்ளீடுப் பிரச்சினை பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இந்த நிலையில் சிறுபோக வேளாண்மை திகதியை தீர்மானிக்க முன்வந்தனர்.
இதன்போது விவசாயிகளான நாங்கள் எமது உள்ளீடுகளை உரிய நேரத்தில் வழங்கினால் மட்டுமே விவசாயத்துக்கான திகதியை தீர்மானிப்போம் என தெரிவித்தோம்.
ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாமல் அவர்கள் திகதிகளை தீர்மானித்துள்ளனர். எனவே நாங்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறினோம்.
இந்த கூட்டத்திற்கு விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் வரவில்லை. புவி சரித்தியவில் திணைக்களம் இந்த வயல்களிலும், வாய்கால்களிலும் மண் ஏற்றுகின்ற திணைக்களம் அங்கு வரவில்லை.
அதனால் கேள்வி கேட்க முடியாது சம்பந்தப்பட்ட மாவட்ட அபிவிருத்திகுழு தலைவர், இராஜாங்க அமைச்சர் வரவில்லை இவர்கள் எல்லாம் வந்திருந்தால் இன்று விவசாய நடவடிக்கைக்கான திகதியை எடுத்திருக்க முடியும். இவர்களுக்கு மாவட்டத்தில் மக்கள் ஒரு அதிகாரத்தை கொடுத்துள்ளனர் ஏன்?
நாங்கள் பணம் கேட்கவில்லை. அரசாங்கத்திடம் இருந்து விவசாயத்துக்காக சரியான உள்ளீடுகளை சரியான நேரத்துக்கு விவசாயிகளுக்கு எடுத்துதரக்கூட இவர்களுக்கு முடியாதா?
இவர்கள் திட்டமிட்டு இங்கு வந்தால் சரியான திகதி வழங்கவேண்டும். இவர்கள் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் சொல்லமுடியாது என இவர்கள் இந்த கூட்டங்களுக்கு வரவில்லையா அல்லது மாவட்ட செயலகத்தில் இருந்து இவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லையா?
எனவே இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு ஒழுங்கு முறையாக அறிவித்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அந்த இடத்துக்கு வந்தால் தான் இந்த கூட்டத்துக்கு நிறைவான தீர்வு கிடைக்கும்.
பொலன்னறுவை மாவட்டத்தில் விவசாய அமைச்சர் கூட்டத்தில் இருக்கின்றார். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உத்தியோகத்தர்களும் விவசாயிகளும் இருக்கின்றோம். நாங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு தீர்வு வழங்கமுடியாத உயர் அதிகாரிகள் இருக்கின்றனர்.
எனவே இனிவரும் காலங்களில் விவசாய முன்னோடி கூட்டமோ ஆரம்பகூட்டமோ நடக்கும்போது இதற்கு சரியான அதிகாரிகள் அழைக்கப்படவேண்டும் மாவட்ட பிரதிநிதிகள் அழைக்கப்பட வேண்டும். 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர் அவர்களுக்கு என்ன நடக்குது என்று தெரியாது.
சுற்று சூழல் திணைக்களம் அழைக்கப்படவேண்டும். இதன் மூலம் ஒரே கூடையின் கீழ் தீர்வு வழங்கவேண்டும் இவர்கள் தனி தனியாக சந்திப்பதற்கு நேரம் தரமாட்டர்கள் இவர்கள் கேள்விகளுக்கு பதில் தர பயம் செய்வது எல்லாம் கள்ள வேலைகள் எனவே இந்த உரம் உட்பட உள்ளீடுகளை எடுத்த பின்னர் கூட்டத்தை நடத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபரையும் விவசாய திணைக்களத்தையும் கேட்டு கொள்கின்றோம் எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளனர்.