வவுனியா – புளியங்குளம் பழையவாடி பகுதியிலுள்ள லக்சபான மின்சார பொது வழியை அபகரித்து அங்கு மல்லிகை செய்கை திட்டம் மேற்கொள்வதற்கு அப்பகுதியிலுள்ள தேசிய அரசியல் கட்சியின் பின்னணியுடன் தனிநபர் ஒருவரினால் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் அவ் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழையவாடி மற்றும் நாவல்காடு பகுதியூடாக செல்லும் லக்சபான மின்சார பொது வழியை அபகரித்து அப்பகுதியில் மல்லிகை செய்கை திட்டத்தை மேற்கொள்வதற்கு அங்குள்ள தனிநபர் ஒருவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கைக்கு அப்பகுதியிலுள்ள மக்கள் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருவதுடன் அண்மையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ் . தவபாலன் தலைமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
”குறித்த பகுதியில் மல்லிகை செய்கை திட்டத்தை மேற்கொள்வதற்கு அங்குள்ள தனிநபர் ஒருவர் தேசியக்கட்சி ஒன்றின் பின்னணியுடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
இந்நடவடிக்கைக்கு அப்பகுதியிலுள்ள மக்கள் தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருவதுடன் குறித்த லக்சபான மின்சார வழிப்பாதையூடாக பழையவாடியில் வயல் செய்கை நடவடிக்கைகளையும் கால்நடைகளை மேய்ச்சல் தரைக்குக் கொண்டு சென்றும் எமது வாழ்வாதாரங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.
அத்துடன் லக்சபான மின்சார வழியில் பல ஆண்டுகளாக நாங்கள் குடியேறி தோட்ட செய்கைகளையும் மேற்கொண்டு வசித்து வருகின்றோம்.
இங்கு இவ்வாறான திட்டங்களை மேற்கொள்வதால் அங்கு வசித்து வரும் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே இந்நடவடிக்கையினை உடன் தடுத்து நிறுத்தி எமது வயல் நிலங்களையும் எமது பூர்வீக காணிகளையும் மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு குறித்து வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபனை தொடர்பு கொண்டு வினவிய போது,
மல்லிகை தோட்டம் செய்யும் நபர் ஒருவர் திட்டத்தை எம்மிடம் கொண்டு வந்துள்ளார். எங்களிடம் அரச காணிகள் எவையும் இல்லை என்று தெரிவித்தோம்.வன இலகாவினரின் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றினை கோரியிருந்தார்.
அதனையும் எம்மால் அவருக்கு வழங்க முடியவில்லை. கொழும்பிலுள்ள இலங்கை மின்சார சபை லக்சபான மின்சார வழிப்பாதையில் ஒதுக்கப்பட்ட அவர்களின் கீழ் பராமரிப்பிலுள்ள பகுதியில் மல்லிகை செய்கை நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தங்களுக்கு ஆட்சேட்னை இல்லை என்றும் அவருக்கு அனுமதியளிக்கப்பட்டு ஆவணம் ஒன்றினை அவருக்கு வழங்கியுள்ளது.
அதனுடன் காணி ஆணையாளர் நாயகம் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளார். இவ்விரண்டு ஆவணங்களையும் எமக்கு அனுப்பிப் பார்வையிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது . நாங்கள் அப்பகுதியில் எவ்வளவு காணி உள்ளது என்பதை அளவீடு செய்து தருமாறு நில அளவைத்திணைக்களத்திடம் கோரியிருந்தோம்.
எனவே அப்பகுதியில் காணி அனுமதி வழங்கிய இரு அனுமதிகளுக்கும் அமைவாகப் பிரதேச செயலகத்தினால் காணி அளவீடு செய்து வழங்க வேண்டியிருந்தது. இவ்விடயத்தில் நன்மைகள், தீமைகள் இருப்பின் இது குறித்து அரசாங்க அதிபருக்கோ அல்லது குறித்த நிறுவனங்களுக்கோ அறிவிக்கவில்லை . எங்களிடம் சரியான காரணத்துடன் முறைப்பாடு எவையும் மேற்கொள்ளவில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்.