வடக்கு, கிழக்கு மாநிலங்களில் அரசியலமைப்பில் அரச கரும மொழியாகத் தமிழ் மொழி அமுலாக்கப்பட்டுள்ளது. எனினும் எமது பகுதிகளிலுள்ள அரச நிர்வாகத்தினரால் திட்டமிட்ட முறையில் தமிழ் மொழி உரிமை அழிக்கப்பட்டு வருகின்றது என சமூக ஒற்றுமைக்கான மக்கள் பேரவையின் தலைவர் மாசிலாமணி ஆதங்கம் தெரிவித்துள்ளார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் அரச நிர்வாகச் சேவையில் உள்ள அதிகாரிகள் தமது வாகனங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதவி நிலை விளம்பரப் பதாதையில் தமிழ் மொழியைப் புறக்கணித்து சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில் காட்சிப்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.
அண்மையில் இது குறித்து வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் தங்களது வாகனத்தில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியிருந்தேன்.
அது தனது தனிப்பட்ட வாகனம் என்று தெரிவித்துவிட்டுச் சென்றுவிட்டார். தற்போது எமக்கு இருக்கும் ஒரே பலம் மொழி உரிமையே அதுவே எமது இனத்தின் அடையாளம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபச்சவின் ஆட்சிக்காலத்தில் அரச கரும மொழிகள் அமைச்சராக வாசுதேவ நாணயக்கார நியமிக்கப்பட்டிருந்தார்.
அவ் அமைச்சரினால் வவுனியா மாவட்ட செயலகத்தில் மொழி அமுலாக்கல் செயலணிக்கு 13 இலட்சம் ரூபாய் செலவில் அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டு மிகப் பெரும் நிகழ்வாக அவ் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டிருந்தது . தற்போது அவ் அலுவலகத்தினூடாக மொழி உரிமை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எமது பகுதிகளில் எமது மொழி உரிமைகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வருகின்றது. இந்நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தி எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள சிங்கள மயமாக்கலைத்தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை இங்குள்ள மக்கள் பிரதிநிதிநிகள் மேற்கொள்ள முன்வரவேண்டும் என்றார்