தற்போது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மூன்று அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டைத் தோற்கடிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் திட்டமிடப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ச, நிமால் சிறிபால டி சில்வா, நஸீர் அஹமட் ஆகியோரின் அமைச்சுக்களையே இவ்வாறு தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்று அறியமுடிகின்றது.
இந்த அமைச்சுக்களால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எந்தவித பிரயோசனமும் இல்லை என்றும், எதுவித உதவியும் இந்த அமைச்சுக்களால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குக் கிடைப்பதில்லை என்றும் தெரிவித்தே இந்த அமைச்சுக்களைத் தோற்கடிப்பதற்குத் திட்டம் தீட்டப்படுகின்றது என்று ‘மொட்டு’க் கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது.
இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பகைத்துக்கொண்டு நிமால் சிறிபால டி சில்வாவும் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பகைத்துக்கொண்டு நஸீர் அஹமட்டும் அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றதால் அந்தக் கட்சிகளின் ஆதரவும் ‘மொட்டு’க் கட்சிக்குக் கிடைக்கும் என்று நம்பப்படுகின்றது.