எரிவாயு விநியோகத்தை தடை இன்றி மேற்கொள்வதற்காக உலக வங்கியினால் கிடைத்த கடன் தொகையில் ஒரு பகுதியை திறைசேறிக்கு செலுத்த முடிந்துள்ளது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த முழு கடன் தொகையையும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் திறைசேரிக்கு செலுத்தப்படும் என்று அதன் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்….
உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 70 மில்லியன் டொலர்களை மீண்டும் திறைசேரிக்கு செலுத்த ஆரம்பித்துள்ளோம். நாம் ஜூலை மாதம் உலக வங்கியிடம் இருந்து உதவித் தொகையைப் பெற்றோம். அந்த உதவித் தொகையில் முதல் கட்டத்தைப் பெற்று தற்போது மத்திய கட்டத்தில் இருக்கிறோம். மீதமுள்ளவை தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
உலக வங்கியின் மீதமுள்ள 70 மில்லியன் டொலர்களை தற்போது வருகின்ற கப்பலுக்கு செலுத்தி வருகின்றோம். செப்டம்பர் மாதத்தில் 6.5 பில்லியன் திறைசேரிக்கு செலுத்தியது போல், அக்டோபர் மாதத்திலும் மேலும் 8 பில்லியன் தொகையை திறைசேரிக்கு செலுத்த நாம் எதிர்பார்த்துள்ளோம். அதன்படி, டிசம்பர் மாதத்துடன் உள்ளடக்கிய 26 பில்லியன் முழுத் தொகையை மொத்த லிட்ரோ எரிவாயு நிறுவனம் செலுத்துவதற்கான திட்டங்களை தயாரித்துள்ளோம்.´ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.