யுக்ரெய்னை ஆக்கிரமிப்பதற்கு ரஸ்யா தயாராகி வருகின்ற நிலையில், தமது குடிமக்களை அங்கிருந்து 48 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு பல நாடுகளும் கோரிக்கைகயை முன்வைத்துள்ளன.
இங்கிலாந்து, கனடா, நெதர்லாந்து, லாட்வியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளே இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.
தமது குடிமக்கள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
ரஸ்யாவின் படையெடுப்பு வான்வழி குண்டுவீச்சுடன் ஆரம்பிக்கலாம். இது குடிமக்களுக்கு பாாிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.
எல்லைக்கு அருகில் 100,000 துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளபோதும், யுக்ரைன் மீது படையெடுப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என்று மொஸ்கோ தெரிவித்துள்ளது.
மேற்கத்திய நாடுகளே தவறான தகவல்களை பரப்புவதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சுமத்தியுள்ளது
முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் எண்டனி பிளிங்கன், எல்லையில் ரஷ்யப் படைகளின் அதிகரிப்பு ரஷ்ய விரிவாக்கத்தின் மிகவும் கவலைக்குரிய அறிகுறிகளாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ரஷ்ய நடவடிக்கையின் போது சிக்கித் தவிக்கும் எந்தவொரு குடிமக்களையும் மீட்க தமது துருப்புக்களை அனுப்பப் போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி பைடன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் இருவரும் இன்று ரஸ்ய ஜனாதிபதி புட்டினுடன் பேச்சுவார்த்தையை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2014 ஆம் ஆண்டு முதல் யுக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது.
இந்த மோதல்களில் இதுவரை 14,000 பொதுமக்கள் இறந்துள்ளனர். இந்த கிழக்கு யுக்ரேனில் மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஏற்கனவே உடன்படிக்கைகளும் செய்துக்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போதைய மோதல் நிலையை முடிவுக்கு கொண்டு வர இந்த உடன்படிக்கைகளை மீளமைக்கமுடியும் என்று கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
இந்த உடன்படிக்கைகளை யுக்ரைன், ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஆதரிக்கின்றன என்பதும் முக்கிய விடயமாகும்.