யாழ்.நல்லூர்ப் பகுதியில் அமைந்துள்ள நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்னால் மாமிசக் கழிவுகளுடன் கூடிய மூட்டை ஒன்று இனந்தெரியாத நபர்களிகளால் போடப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளனர்.
மேலும் மாமிசக் கழிவுகளால் அப் பகுதியில் துர்நாற்றம் வீசியதால் ஆலய சூழல் பாதிக்கப்பட்டதுடன், அவ் வீதியால் பயணித்தவர்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, இவ் விடயம் குறித்து நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் தெ.கிரிதரனின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து, அயலவர்களின் உதவியுடன் குறித்த கழிவுகள் எரியூட்டப்பட்டுப் புதைக்கப்பட்டது.
நாட்டில் இப்படியான சமூகப் பொறுப்பற்றவர்களின் செயற்பாடுகளால் சுற்றுச் சூழல் மாசடைவதுடன், சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகின்றது.
எனவே இவர்களை அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.