யாழ்ப்பாண கரைகளில் ஒதுங்கிய சடங்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களா என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த சந்தேகத்தை வெளியிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், யாழ்ப்பாண குடாநாட்டு கரையோரங்களில் 6 சடலங்கள் கரையொதுங்கின.
இதில் நெடுந்தீவில் கரையொதுங்கிய சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உள்ளது. அதேவேளை வல்வெட்டித்துறை, பருத்தித்துறை பகுதிகளில் மீட்கப்பட்ட 3 சடலங்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கட்டைக்காட்டில் மீட்கப்பட்ட சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருதங்கேணி பொலிஸ் பகுதியில் மீட்கப்பட்ட சடலத்தை பொலிசார் சென்று பார்த்துள்ளதாக தெரிவித்த சிறிதரன் அந்த சடலத்திற்கு என்ன நடந்தது எனவும் கேள்வி எழுப்பினார். அதோடு கரையொதுங்கிய சடலங்களும் காணாமல் போவது மிக ஆபத்தானது எனவும் அவர் சுட்டிகாட்டினார்.
அதேவேளை பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிரியந்தகுமாரவிற்கு எமது அஞ்சலிகளை செலுத்திக் கொள்கிறோம் என குறிப்பிட்ட சிறிதரன், இதேபோன்ற காட்சிகள் இலங்கையிலும் நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அந்தவகையில் தளபதி ரமேஷ், இசைப்பிரியா, பாலச்சந்திரன் போன்றவர்களும் இப்படித்தான் கொல்லப்பட்ட படங்கள் வெளியாகியதாக தெரிவித்த அவர், பாகிஸ்தானில் நடந்த சம்பவத்திற்கு பிரதமர் இம்ரான் கான் உடனடியாக மன்னிப்பு கோரினார்.
ஆனால் இலங்கையில் அப்படியான சிங்கள தலைவர்கள் யாருமில்லை எனவும் தெரிவித்தார்.