வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு விகாரையில் யானைகளை விரட்டுவதற்கு பயன்படுத்தும் யானைவெடி வெடித்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட விகாரையின் விகாராதிபதியை 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவமானது கடந்த 2 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓமனியாமடு – கல்மடு மலையடிவாரம் பகுதியில் இடம்பெற்றது.
இதில் வெலிகந்த பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஹேரத் முதியன்செலாகே சிசிர குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மது போதையில் அங்கு சென்ற ஏழு இளைஞர்களுக்கும் ஓமனியாமடு விகாராதிபதிக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது விகாராதிபதி யானைவெடியை கொழுத்தி அதனை ஒரு இளைஞனின் வயிற்றில் வைத்து கட்டிப்பிடித்ததில் வெடிவெடித்ததில் இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் தேரர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சம்பவம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்ற வாழைச்சேனை நீதிமன்ற பதில் நீதிபதி ஈ.எல். சஹாப்தீன் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இளைஞனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டார்.
மேலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுக்கமைய அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தேரரை பொலிஸார் கைது செய்து சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.