முல்லைத்தீவு, கேப்பாப்புலவு காணி விடயம் தொடர்பாக இலங்கை விமானப் படையினர் விடுத்த கோரிக்கைக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கேப்பாப்புலவில் உள்ள 0.5 ஹெக்டயர் மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளை தமது தேவைக்காக விமானப்படையினர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி கோரியிருந்தனர்.
இதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் எடும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஏற்கனவே படையினரால் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் தொடர்பில் சுட்டிக்காட்டி விசனம் வெளியிட்டார்.
அவரது எதிர்ப்பை அடுத்து, நேற்று (29) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விமானப்படையினருக்கு காணி வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இந் நிலையில், விமானப்படை மீண்டும் இக்காணிகளைக் கோருவது பொருத்தமற்றது.
கேப்பாப்புலவில் இன்னும் 190 ஏக்கர் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன.
மக்கள் தொடர்ந்து போராட்டங்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர்.
யுத்தம் முடிந்து ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாகியும், விமானப்படையினர் மக்களின் காணிகளை அபகரித்து யாருடன் போர் செய்யப்போகின்றனர்?
எனவே, இக்காணிகளை விமானப்படைக்கு வழங்குவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தீர்க்கமாக கூறினார்.
இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விமானப்படையினருக்கு காணி வழங்குவதில்லை உறுதியாக தீர்மானிக்கப்பட்டது.

