மின்சாரக் கட்டணம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபை இணைந்து நேற்று (13) நடத்திய கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்ததாக இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் இன்று (14) பாராளுமன்றத்தில் தேசிய பேரவைக்கு அறிவித்தனர்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இரண்டு தரப்பினரும் கூடிக் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்குமாறு நேற்று (13) முற்பகல் கூடிய தேசிய பேரவை அறிவித்திருந்தது.
அதற்கமைய, நேற்று பிற்பகல் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க முடியாமல் போனதாகவும் அதிகாரிகள் இதன்போது தேசிய பேரவைக்கு அறிவித்தனர்.
இன்று ஆணைக்குழு கூடி இறுதித் தீர்மானம் எடுக்க எதிர்பார்ப்பதாக இதன்போது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தேசிய பேரவை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இன்று (14) கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில், மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தை 15 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிப்பதாக இதற்கு முன்னர் தேசிய பேரவை கூடிய போது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பேரவைக்கு அறிவித்ததாகவும், அதனால் நாளை (15) இது தொடர்பில் தீர்மானமொன்று எடுக்கப்படும் என தான் நம்புவதாகக் குறிப்பிட்டார்.
அமைச்சர்களான காஞ்சன விஜேசேகர, டிரான் அலஸ், இராஜாங்க அமைச்சர்களான டி.வி. சானக, இந்திக்க அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அதேபோன்று, பதவியணித் தலைமை அதிகாரியும், பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீரவும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.