“உழைக்கும் வர்க்கத்தினருக்கு பெரும் பாதிப்பாக அமையவுள்ள மிகைவரி சட்ட மூலத்தை அரசு உடனடியாக மீளப்பெற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தொழிற்சங்கப் போராட்டம் வெடிக்கும்” என அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹட்டனில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” வரவு, செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை அதிகரித்ததால், அதனை நிவர்த்தி செய்வதற்கு புதிய வழிமுறையொன்று கையாளப்படும் என நிதி அமைச்சு அறிவித்திருந்தது. அதற்காக தற்போது மிகைவரி சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு தனக்குத் தேவையான நிதியைத் திரட்டிக்கொள்வதற்காக அறிமுகப்படுத்தியுள்ள இந்த கொள்ளைக்கார, மோசடி வரித்திட்டத்தால் உழைக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
இதனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் தமது அரசியல் இருப்புக்காகப் பல மோசடிகளில் ஈடுபடும் இந்த அரசு, தற்போது ஊழியர் சேமபாலா நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியமன் என்பவற்றில் கைவைக்க முற்படுகின்றது.
அரசின் இந்த கொள்ளைக்கார திட்டம் குறித்து தொழிற்சங்கங்கள் விழித்துக்கொண்டுள்ளன. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாம் தெளிவுபடுத்திவருகின்றோம். உழைக்கும் வர்க்கத்தின் பணத்தைச் சூறையாடும் குறித்த மிகை வரி சட்ட மூலத்தை அரசு மீளப்பெற வேண்டும். இல்லாவிட்டால் தொழிற்சங்க போராட்டங்கள் வெடிக்கும்.” என தெரிவித்துள்ளார்