பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற நபரை மட்டக்குளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மட்டக்குளி பொலிஸ் நிலையத்தின் பதில் நிலைய பொறுப்பதிகாரிக்கு நேற்றைய தினம் (16) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அந்த பொலிஸ் பகுதியில் போதைப்பொருள் கடத்தலை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியுள்ளார்.
அதோடு சந்தேகநபர் மாதாந்தம் ஒரு லட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்க விரும்புவதாகவும் பதில் நிலைய கட்டளைத் தளபதியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து குறித்த நபர் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பதில் நிலைய பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.
இதன்படி சந்தேகநபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துள்ள நிலையில், சந்தேகநபர் 50,000 ரூபாவை பதில் நிலைய பொறுப்பதிகாரிக்கு வழங்க முற்பட்ட போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தில் கைதான சந்தேகநபர் மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது