பிரதேச செயலகத்தின் பிரதான நிர்வாக அதிகாரியை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது பொலன்நறுவை தல்பொத்த பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் பொலன்நறுவை லங்காபுர பிரதான நிர்வாக அதிகாரியான பெண்ணொருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் பொலன்நறுவை தல்பொத்த என்ற இடத்தில் வசித்து வந்த 42 வயதான எம்.எல்.யமுனா பத்மினி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலைச்சம்பவம் இடம்பெற்ற போது கணவர் மற்றும் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளதாகவும் எதற்காக இந்தக்கொலை இடம்பெற்றது என பொலிஸாருக்கு தெரியவில்லை அது தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணை கொலை செய்தது யார், எந்த காரணத்திற்காக கொலை செய்தனர் என்பதை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலன்நறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஓஷான் ஹேவாவித்தாரணவின் உத்தரவின் பேரில் சிறப்பு பொலிஸ் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.