திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் நேற்று (22.05.2025) பகல் நேரத்தில், பொதுமக்கள் நெரிசல் அதிகம் காணப்படும் பகுதியில், இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு, கூரிய ஆயுத தாக்குதலாக மாறி அதிர்ச்சி சம்பவமாகியுள்ளது.
தாக்குதலுக்குள்ளான நபரின் தாயார் தெரிவித்ததாவது, “எனது மகனுக்கும், குறித்த நபருக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சினையால் இந்த தாக்குதல் ஏற்பட்டது. எனது கடைக்குள் நுழைந்து மகனைத் தாக்கியுள்ளார். தாக்குதலின்போது ஏற்பட்ட காயத்திற்காக 25 தையல்கள் போட வேண்டிய நிலை உருவானது. இத்தகைய குற்றச்செயல்கள் நடைபெற பொலிஸார் எப்படி அனுமதிக்கின்றனர்? நாங்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.”
இச்சம்பவம் திருகோணமலை மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தாக்குதலுக்கு காரணமான நபர் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பட்டப்பகலில் நடுவீதியில் இடம்பெற்ற இந்தக் கொடூரமான தாக்குதல் சம்பவம், பொது மக்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பும் வகையில் அமைந்துள்ளது. அதிகாரிகள் சட்டத்தை உறுதியாகப் பின்பற்றுமாறு பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.