நமது உடலிலுள்ள முக்கியமான உறுப்புகளுள் சிறுநீரகமும் ஒன்று, சிறுநீரகம் சரியாகச் செயல்படத் தவறினால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டு மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.
ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு என்பது நீரிழிவு, முதுமை, மரபணு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றின் காரணமாக கூடவும் ஏற்படலாம். சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால் இதயம் மற்றும் இரத்த நாள நோய்களும் வரக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்,
பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் சிறுநீரகத்தில் பெரிய நீர்க்கட்டிகள் மற்றும் சிறுநீரகத்தை சுற்றியுள்ள திசுக்களுக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது.
சிறுநீரக பாதிப்பிற்கு மற்றொரு காரணம் லூபஸ் ஆகும், இது சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வடிகட்ட அனுமதிக்கும் சிறிய இரத்த நாளங்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
பல காரணிகளால் சிறுநீரகம் பாதிப்பு அடையும்போது, சிறுநீரகங்கள் முழுமையாக செயலிழந்து டயாலிசிஸ் அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. தற்போது சிறுநீரகத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்,
இருப்பினும் இதை யாரும் கவனிப்பதில்லை. சிறுநீரக பாதிப்பு ஆரம்ப காலகட்டத்தில் பெரியளவில் அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை, அதனால் இது சைலன்ட் கில்லர் என்று அழைக்கப்படுகிறது.
பலரும் இரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை பரிசோதிக்கும் போது, அவர்கள் இரத்தத்தில் உள்ள கிரியாட்டினின் அளவை சரிபார்க்க தவறிவிடுகின்றனர்,
இதன் அளவை வைத்துதான் நமது சிறுநீரகம் எந்த அளவில் உள்ளது என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும். மேலும் நம் உடலில் வெளிப்படும் சில அறிகுறிகளை வைத்து நமது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை கண்டறிய முடியும்.
எந்த வேலையும் செய்யாமல் இருக்கும்போதும் நீங்கள் சோர்வாக உணர்ந்தால் உங்கள் சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளது என்று அர்த்தம், அதனால் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
உங்களால் எதையும் சாப்பிட முடியாவிட்டால், அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும், பொதுவாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இந்த அறிகுறி காணப்படுகிறது.
பொதுவாகவே சிறுநீரகத்தில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் பாதங்கள் மற்றும் கணுக்கால் வீங்கிப்போகும், இது சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இருக்கக்கூடிய பிரச்சனை ஆகும்.
கண்கள் வீங்கி இருந்தால் சிறுநீரக நோய் இருப்பதாக அர்த்தம். மேலும் வறண்ட சருமம், தோல் அரிப்பு, துர்நாற்றம் வீசும் சருமம் போன்றவை சிறுநீரக செயல்பாடு குறைவதால் ஏற்படுகிறது.
சிறுநீர் வெளியேறுவதை மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டும். உதாரணமாக, சிறுநீர் வெளியேற்றம் குறைவாக இருந்தாலோ அல்லது அடிக்கடி குறிப்பாக இரவில் சிறுநீர் கழித்தாலோ மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
உயர் இரத்த அழுத்தம் காரணமாக சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம், உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் தங்களது சிறுநீரகத்தின் செயல்பாட்டை கவனிக்க வேண்டியது அவசியம்.