போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து போராட்டகாரர்கள் சிலர் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அறைகளை பலவந்தமாக பயன்படுத்தி வந்தது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மூன்று அறைகளில் பலந்தமாக தங்கிய போராட்டகாரர்கள்
போராட்டகாரர்களில் சிலர், ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மூன்று அறைகளில் பலவந்தமாக தங்கி இருந்ததாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து அங்கு சேதங்களை விளைவித்த 100க்கும் மேற்பட்ட நபர்களின் கைவிரல் அடையாளங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அவற்றை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வழங்கி, கைவிரல் அடையாளங்களுக்குரிய நபர்கள் வெளிநாடு செல்ல முயற்சித்தால், அவர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
ஜனாதிபதி மாளிகையில் வைஃபையை பயன்படுத்தி சந்தேகத்திற்குரிய தொலைபேசி அழைப்புகளை எடுத்த நபர்கள்
போராட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட பின்னர், அங்குள்ள வைஃபை இணைய வசதியை பயன்படுத்தி சந்தேகத்திற்குரிய வகையில் தொலைபேசி அழைப்புகளை எடுத்த சிலர் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தொலைபேசி தரவு அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு அந்த நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.