கொழும்பு, மருதானை-பஞ்சிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற கப்பம் கோரும் சம்பவம் என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி குறித்து புறக்கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, இச்சம்பவமானது அப்பிள் ஐபோன் 13 புரோ மெக்ஸ் (Apple iPhone 13 Pro Max) ரக அலைபேசியொன்றின் பழுதுபார்ப்பு தொடர்பாக வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட தகராறினால் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
சொத்துக்களுக்குச் சேதம்
புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள பொலக் மார்க்கெட் (Pollack Market) வர்த்தக வளாகத்திலுள்ள கடையொன்றில், கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி வாடிக்கையாளர் ஒருவர் தனது அலைபேசியின் திரையை (Display) மாற்றுவதற்காக ஒப்படைத்துள்ளார்.
பழுதுபார்ப்பிற்காக அக்கடை ரூ. 16,000 கட்டணமாகப் பெற்றுக்கொண்டு அலைபேசியை வாடிக்கையாளரிடம் ஒப்படைத்துள்ளது. மறுநாள் மீண்டும் கடைக்கு வந்த வாடிக்கையாளர், பழுதுபார்ப்பு சரியாகச் செய்யப்படவில்லை எனக் கூறி தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்
அதன்போது தனது அலைபேசியில் கடை வளாகத்தைப் படம்பிடிக்கத் தொடங்கியதனால் கடையின் உரிமையாளர் வாடிக்கையாளரிடமிருந்து அலைபேசியைப் பிடுங்கி கடையில் வைத்துள்ளார்.
பின்னர் செப்டம்பர் 20 ஆம் திகதி, வாடிக்கையாளர் வாள் ஒன்றுடன் கடைக்கு வந்து, தனது அலைபேசியைத் திரும்பத் தருமாறும் பழுதுபார்ப்புக் கட்டணத்தைத் திரும்ப அளிக்குமாறும் கோரி அங்கிருந்த சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன் பிறகு அவர் ஒரு காரில் தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து புறக்கோட்டை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான செய்திகளை கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து விசாரணைகளைத் தொடங்கினர்.
தப்பிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் பதிவுசெய்த உரிமையாளரைக் கண்டறிந்த பொலிஸார், செப்டம்பர் 23 ஆம் திகதி முதன்மைச் சந்தேகநபரை அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பத்தரமுல்ல, கொஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸார் வாகனத்தைக் கைப்பற்றியுள்ளதுடன், இச்சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாளை மீட்பதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

