அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்ந்தால் மத்திய கிழக்கிலிருந்து ஒரு லிட்டர் எண்ணெயையும் அனுப்ப அனுமதிக்க மாட்டோம் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) செவ்வாயன்று (10) கூறியது.
அதேநேரம், முக்கிய எரிசக்தி உற்பத்தி செய்யும் பிராந்தியத்திலிருந்து தெஹ்ரான் ஏற்றுமதியைத் தடுத்தால் அமெரிக்கா ஈரானை மிகவும் கடுமையாகத் தாக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
ஈரானின் பாதுகாப்பு ஸ்தாபனம் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனியின் பின்னால் அணிதிரண்டு வருவதாகவும், மோதலிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று வெளியிட்ட அறிக்கையைத் தெடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
இதனிடையே, ஈரானின் மதகுரு ஆட்சி முறையைத் தூக்கியெறிவதே தனது போர் நோக்கம் என்று இஸ்ரேல் கூறுகிறது.
ஈரானின் ஏவுகணைத் திறன்களையும் அணுசக்தித் திட்டத்தையும் அழிப்பதே வொஷிங்டனின் நோக்கம் என்று அமெரிக்க அதிகாரிகள் முக்கியமாகக் கூறுகின்றனர்.
ஆனால் இணக்கமான ஈரானிய அரசாங்கத்தால் மட்டுமே போர் முடிவுக்கு வர முடியும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
2026 பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் முழுவதும் வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதில் இருந்து குறைந்தது 1,332 ஈரானிய பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்று ஈரானின் ஐ.நா. தூதர் தெரிவித்துள்ளார்.

