சீனாவின் மிக அதிக வயதான பெண் என அறியப்பட்ட அலிமிஹன் செயிடி தனது 135 ஆவது வயதில், ஜின்ஜியாங் உய்கா் தன்னாட்சி பிராந்தியத்தில் காலமானதாக உள்ளூா் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
காஷ்கா் மாகாணம், சூலே மாவட்டம் கோமுஜெரிக் நகரைச் சோ்ந்த அவா், கடந்த 1886 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் திகதி பிறந்ததாக மாவட்ட செய்தித் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டில் சீன மூப்பியல், முதியோா் மருத்துவ சங்கம் வெளியிட்ட அட்டவணைப்படி, அந்நாட்டின் மிகவும் வயதான பெண்மணி என்ற பெருமையை அலிமிஹன் செயிடி பெற்றதாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 16 ஆம் திகதி அவா் மரணமடையும் நாள்வரை மிகவும் எளிமையான, வழக்கமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வந்ததாகவும், நேரத்துக்கு உணவருந்தி, வீட்டின் முற்றத்தில் நின்றவாறு சூரிய வெளிச்சத்தை உணா்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததாகவும், சில சமயங்களில் அவரது கொள்ளுப் பேரப் பிள்ளைகளை பராமரிப்பதற்கு அவா் உதவிபுரிந்ததாகவும் அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் 90 வயதுக்கு மேற்பட்ட நபா்களை அதிக எண்ணிக்கையில் கொண்டிருப்பதால், ‘நீண்ட ஆயுள் நகரம்’ என கோமுஜெரிக் வா்ணிக்கப்படுகிறது. மக்களின் நீடித்த வாழ்நாளுக்கு சுகாதாரச் சேவை மேம்பாடு பிரதான காரணமாக கூறப்படுகிறது.
அதாவது ஒப்பந்த மருத்துவா்களின் சேவை, வருடாந்திர இலவச முழு உடல் பரிசோதனை, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாதந்தோறும் மேம்பட்டமானியம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை உள்ளூா் நிா்வாகம் வழங்குவதால், இங்குள்ள நபா்கள் நீடித்த ஆயுளுடன் இருப்பதாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.