சர்வதேச எழுத்தறிவு தினம் இன்றாகும்.
‘மக்கள், பூமி மற்றும் வளமான வாழ்விற்கான எழுத்தறிவு’ என்பது இம்முறை அதன் கருப்பொருளாகும்.
யுனெஸ்கோ அமைப்பின் கூற்றுப்படி, இந்த கருப்பொருள் உள்ளடக்கம், மேம்பாடு, நிலையான எதிர்காலத்திற்கு ஆதரவளித்தல் மற்றும் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் எழுத்தறிவின் பங்களிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
எழுத்தறிவின் முக்கியத்துவம் குறித்து உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், யுனெஸ்கோ தனது 14 ஆவது பொது மாநாட்டில் இந்த தினத்தை அறிவித்ததுடன், 1967 ஆம் ஆண்டில் முதலாவது சர்வதேச எழுத்தறிவு தினம் நினைவு கூரப்படுகிறது.
அன்று முதல் அரசுகள், கல்வியாளர்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு எழுத்தறிவின் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதற்காக ஆண்டுதோறும் செப்டெம்பர் 8 ஆம் திகதி இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த ஆறு தசாப்தங்களில் எட்டப்பட்ட முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும் உலகளவில் எழுத்தறிவில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் சவால்களை ஆராய்வதற்கும் இம்முறை வாய்ப்பளிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளாவிய எழுத்தறிவு மட்டங்கள் கணிசமாக அதிகரித்துள்ளபோதிலும், இன்னும் பெரிய இடைவெளிகள் நிலவும் ஒரு தருணத்திலேயே இந்த ஆண்டில் இந்நாள் நினைவுகூரப்படுகிறது.
2024 ஆம் ஆண்டின் தரவுகளின் அடிப்படையில் யுனெஸ்கோ சுட்டிக்காட்டியுள்ளதாவது, உலகளவில் 739 மில்லியன் இளைஞர்கள் மற்றும் பெரியோர் இன்னமும் அடிப்படை எழுத்தறிவுத் திறன்கள் இன்றி உள்ளனர் என்பதாகும்.
அத்துடன் 10 குழந்தைகளில் நான்கு பேர் வாசிப்பில் குறைந்தபட்ச தேர்ச்சியைக்கூட அடையவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த ஆண்டின் கருப்பொருள் எழுத்தறிவை ஒரு தனி நபர் திறனாக மட்டுமன்றி பரந்த சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடையதாகவும் கருத்தில் கொள்ளவுள்ளது.
இதேவேளை, இலங்கையில் எழுத்தறிவு விகிதம் 97.4% ஆக உயர்ந்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்திணைக்களத்தின் தரவுகளின்படி, இலங்கையர்களின் டிஜிட்டல் மற்றும் கணினி எழுத்தறிவு மிக அதிக அளவில் முன்னேற்றம் கண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 5 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள்தொகையில் டிஜிட்டல் எழுத்தறிவு 67.6% ஆகவும், கணினி எழுத்தறிவு 34.7% ஆகவும் பதிவாகியுள்ளது.

