கொழும்பு துறைமுகத்தில் தேங்கி இருக்கும் 360 மெட்ரிக் தொன் பால்மா அடங்கிய 16 கொள்களன்களை விடுவிக்க தேவையான டொலர்களை வர்த்தக வங்கிகளுக்கு விடுவிப்பதாக மத்திய வங்கி அறிவித்திருந்தபோதும் இன்னும் அது விடுவிக்கவி்ல்லை என கூறப்படுகின்றது.
இதன் காரணமாக துறைமுகத்தில் இருக்கும் பால்மா தொகையை வேறு நாட்டுக்கு வழங்குவதற்கு வெளிநாட்டு உற்பத்தி நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்களின் பேச்சாளர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.
துறைமுகத்தில் தேங்கி இருக்கும் பால்மா தொகையை விடுவித்துக்கொள்ள எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இதனை குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
துறைமுகத்தில் தேங்கி இருக்கின்ற பால்மா தொகையை விடுவித்துக்கொள்வதற்கு தேவையான டொலர்களை விடுவிப்பதாக அரசாங்கம் (நேற்று முன்தினம்) தெரிவித்திருந்தபோதும் இதுவரை வர்த்தக வங்கிகளுக்கு டொலர்கள் விடுவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் துறைமுகத்தில் இருக்கும் பால்மா தொகை பழுதடையும் அபாயம் இருக்கின்றது. இதன் காரணமாக அருகில் இருக்கும் வெளிநாடு ஒன்றுக்கு வழங்குவதற்கு வெளிநாட்டு உற்பத்தி நிறுவனங்களுடன் கலந்துரையாடி இருக்கின்றோம்.
அதன் பிரகாரம் இடம்பெற்றால் நாட்டில் பால்மாவுக்கான தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும். வ இதேவேளை ர்த்தக வங்கிகளுடன் இன்று (நேற்று) மாலை வேளையில் கதைத்தபோதும் பால்மா தொகையை விடுவித்துக்கொள்வதற்கான டொலர் கிடைக்கவில்லை என்றே வங்கி அறிவித்தது. எனவே வங்கிகளில் பணம் வைப்பிலிட்டு டொலர் கிடைக்கும்வரை காத்துக்கொண்டிருக்கவேண்டி இருக்கின்றது.
மேலும் ஒரு டொலர் 238 ரூபா அடிப்படையில் பெற்றுக்கொடுப்பதற்கு சில ஏற்றுமதியாளர்கள் முன்மொழிகின்றனர். அவ்வாறு டொலருக்கு 35 ரூபா அதிகமாக பெற்றுக்கொண்டு பால்மா தொகையை விடுவித்துக்கொண்டால் ஒரு கிலோவுக்கு 4.10 டொலர் மேலதிக செலவு ஏற்படுவதன் மூலம், துறைமுகத்திலேயே பால்மா கிலோ ஒன்றுக்கு 144 ரூபா மேலதிகமாக அதிகரிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.