இலங்கையில் மின்சார முச்சக்கரவண்டி மற்றும் பஸ்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் UNDP பிரதிநிதிகளுக்கு இடையில் ஆரம்பகட்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் பத்து இலட்சத்துக்கும் அதிகமான முச்சக்கர வண்டிகள் உள்ளது. அந்த முச்சக்கர வண்டிகளை மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாற்றுவதன் மூலம் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதுடன், மலிவு விலையில் பயணிகளை பயணிக்கும் வசதியையும் ஏற்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
E-Mobility திட்டம்
UNDPயின் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படும் E-Mobility திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 300 முச்சக்கர வண்டிகளை மின்சார சக்தியாக மாற்றி, அதற்கான அமைப்பைத் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முழு திட்டத்திற்கும் UNDP மூன்று மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது. இதற்கு மேலதிகமாக கொழும்பு நகரில் மின்சார பஸ் சேவையை ஆரம்பிக்கவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், பெட்ரோலிய நெருக்கடி மற்றும் சுற்றுச்சூழலின் விளைவுகளை குறைக்க இந்த நடவடிக்கை அவசரமாக எடுக்கப்பட உள்ளது.
பதிவு செய்யும் நடவடிக்கை
இதேவேளை, பயணிகள் போக்குவரத்து தொடர்பான அனைத்து நிறுவனங்களின் பொறுப்பையும் ஏற்கும் வகையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கட்டண நிர்ணயம் மற்றும் அபராதம் விதிக்கும் அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்கப்படுவதாகவும், மின்சாரமாக மாற்றப்படும் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும் கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.