கால்பந்தாட்ட அரசன் என போற்றப்படும் பிரேசில் அணியின் முன்னாள் வீரர் பீலே காலமானார்.
இந்தச் சூழலில் சக கால்பந்தாட்ட வீரரும், அர்ஜென்டினாவை சேர்ந்தவருமான மரடோனா மறைந்தபோது பீலே பகிர்ந்த ட்வீட் இப்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
புற்றுநோயால் பாதிப்பு
பீலேவுக்கு கடந்த ஆண்டு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் , புற்றுநோய் பாதிப்பு இருந்த நிலையில் கடந்த 2021, செப்டம்பர் முதல் கீமோதெரபி சிகிச்சையும் எடுத்து வந்தார்.
எனினும் , அவரின் உடல் கீமோதெரபி சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. அதனால் சாவோ பாவ்லோ மாகாணத்தில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
மரடோனா மறைவின்போது பீலே பகிர்ந்த இரங்கல் செய்தி தான் தற்போது வைரலாகி வருகின்றது,
‘நான் எனது உற்ற நண்பனை இழந்தேன். இந்த உலகம் ஒரு ஜாம்பவானை இழந்துள்ளது. நண்பா நம் இருவரையும் பலரும் ஒப்பிட்டு பேசி உள்ளார்கள். இந்த உலகை வசீகரித்த ஜீனியஸ் நீ. பந்தை பாஸ் செய்வதில் நீ மாயக்காரர். மெய்யான ஜாம்பவான். இது அனைத்தையும் விட பரந்த நெஞ்சம் கொண்ட என் நண்பன் நீ. களத்தில் உனது தனித்துவ செயல்கள்தான் ‘ஐ லவ் யூ’ என உன்னை பார்த்து எல்லோரும் சொல்ல காரணம். ஒருநாள் நிச்சயம் சொர்க்கத்தில் நாம் இருவரும் ஒரே அணிக்காக விளையாடுவோம்’ என பீலே பதிவிட்டிருந்தார்.
அதேவேளை பிரேசில் அணிக்காக மூன்று முறை உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர் பீலே . அதோடு பீலே மற்றும் மரடோனா இருவரும் கடந்த நூற்றாண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.