தனது மகளை கத்தியால் குத்தி பலத்த காயம் ஏற்படுத்திய இளைஞரை கைது செய்வதில் பொலிஸார் தாமதம் செய்வதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த 21ஆம் திகதி லபுதுவவில் உள்ள உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் இளைஞர் ஒருவரால் வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்திருந்தார்.
இது தொடர்பாக பொலிஸாரிடம் இதற்கு முன்னர் முறைப்பாடு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
காலியில் உள்ள உயர்தொழில்நுட்ப நிறுவனமொன்றில் இலத்திரனியல் பொறியியல் கல்வி கற்கும் 23 வயதுடைய மூன்றாம் வருட மாணவன் மீது கடந்த 21 ஆம் திகதி லபுதுவ மருத்துவக் கல்லூரி நுழைவாயிலுக்கு அருகில் நபர் ஒருவரால் கத்தியால் குத்தி தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த மாணவி தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மொனராகலை தனமல்வில பகுதியை சேர்ந்த மாணவியே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.
கத்தியால் குத்திய நபர் இதற்கு முன்னர் ஏழு தடவைகள் தனது மகளை அச்சுறுத்தியுள்ளதாகவும், இது தொடர்பில் தனமல்வில பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மாணவியின் தந்தை கூறுகிறார்.
எனினும் இது தொடர்பில் தனமல்வில பொலிஸார் எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மாணவியின் தந்தையும் பொலிஸ் அதிகாரி ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் கத்தியுடன் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.