புத்தளம், தப்போவ சரணாலத்திற்கு உட்பட்ட துத்தநேரிய பகுதியில் சட்டவிரோதமாக காடழிப்பு மேற்கொண்ட குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து, கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த பகுதியில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஹலபுளியங்கும், நீலபெம்ம மற்றும் பஹலபுளியங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து காடழிப்பு மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் பெக்கோ இயந்திரம் ஒன்றும், உழவு இயந்திரம் ஒன்று மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போது, சந்தேக நபர்கள் பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் சுமார் ஐந்து ஏக்கர் அளவில் காடுகளை அழித்துள்ளதாக கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இவ்வாறு காடுகளை தாம் துப்பரவு செய்ததாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளதாக கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.