வலி. மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று ஆரம்பமான நிலையில் இன்றைய கூட்டத்தினை இடை நிறுத்திவிட்டு பிரதேச சபை உறுப்பினர்களும் முன்பள்ளி ஆசிரியர்கள் பிரதேச சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரியும், சம்பள அதிகரிப்பைக் கோரியும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
பெண் தலைமைத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்கள் எனப் பலர் முன்பள்ளி ஆசிரியர்களாகக் கடமையாற்றுகின்றோம். 30 வருடங்களுக்கு மேலாகச் சேவையைச் செய்து ஓய்வுபெறும் வயதிலும் முன்பள்ளி ஆசிரியர்கள் சேவை புரிந்து வருகின்றனர்.
நமக்கு வெறும் ஆறாயிரம் ரூபாவே வேதனமாக வழங்கப்படுகின்றது. தற்கால விலைவாசி அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த ஆறாயிரம் ரூபா ஆறு நாட்களுக்காவது போதுமா? முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என நாங்கள் கடந்த பிரதேச சபை அமர்வில் தீர்மானம் எடுத்துள்ளோம்.
அந்த தீர்மானத்தினை ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம். ஒரு குழந்தை தாயிடம் இருந்து அடுத்த படியாக முன்பள்ளி ஆசிரியர்களிடமே வருகின்றது. ஒரு தாய் செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் நாங்கள் அந்த மாணவர்களுக்குச் செய்கின்றோம்.
ஆனால் எங்களுக்குச் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. எனவே புதிய அதிகாரிகள் இதனைக் கவனத்தில் கொண்டு நமது பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.