மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் தளவாய் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் தளவாய் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் மணல் சுத்திகரிப்பு பண்ணையினுள் உள்ள நீர் வடிந்தோடும் இயற்கைத் தோணாவினுள் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டது.
குறித்த தனியார் காணியினுள் கூலித் தொழிலில் ஈடுபடும் செங்கலடி கித்துள் பகுதியை சேர்ந்த 07 பிள்ளைகளின் தந்தையான கந்தையா ஸ்ரீதர் என்பவரே இவ்வாறு தோணாவினுள் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்றிறவு சுமார் 10.30 மணியளவில் சடலம் பிரதேச இளைஞர்களால் மீட்கப்பட்டது.
குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்த ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் விசாரணைகளை மேற்கொண்டார்.
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குறித்த இடத்தில் பிரதேச இளைஞர்கள், உறவினர்கள் மற்றும் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் ஆகியோர் காணி உரிமையாளர்களுடன் குறித்த உயிரிழப்பு தொடர்பில் தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.