புத்தளத்தில் மின்சார சைக்கிள் ஒன்றை குறைந்த செலவில் தயாரிப்பதில் அப்துல் லதீப் முஹம்மது ரியாஸ் என்பவர் வெற்றி கண்டுள்ளார்.
பெற்றோல் – டீசல் விலைகள் அதிகரித்து வருவதால் பலரும் மின்சார வாகனங்கள் பக்கம் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதிலும், மின்சாரத்தில் இயங்கும் துவிச்சக்கர வண்டிகள் மீது மக்கள் தமது கவனத்தை செலுத்தியுள்ளனர்.
இது பொருளாதார ரீதியாக அனைவருக்கும் ஏற்றதாக அமைவதோடு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்த வகையில், புத்தளம் நகரைச் சேர்ந்த அப்துல் லதீப் முஹம்மது ரியாஸ் மின்சாரத்தில் ஓடக்கூடிய துவிச்சக்கர வண்டி ஒன்றை தானாகவே தயாரித்துள்ளார்.
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக தான் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்ததாகவும், இதனையடுத்து, மேற்படி மின்சாரத்தில் இயங்கக்கூடிய வகையில் துவிச்சக்கர வண்டி ஒன்றை ஒருசில நாட்களில் தயாரித்து அதில் வெற்றியும் கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தனது சொந்த தேவைகளுக்காக மட்டும் இப்போது மேற்படி மின்சார சைக்கிளை தயாரித்துள்ளதுடன், இதுபோல ஏனையவர்களும் பயன்பெற வேண்டும்.
இந்த சைக்கிளை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 20 முதல் 25 கிலோ மீற்றர் தூரம் வரை பயணம் செய்யலாம். இதில் ஜீ.பி.எஸ் வசதியும் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலமே இந்த சைக்கிள் எத்தனைக் கிலோ மீற்றர் தூரம் ஓடும் என்பதை சரியாக கணிக்கலாம். 12 வோல்ட் பெட்டரியை பயன்படுத்தி அதிலிருந்து ஏ.சி கரன்ட்டாக மாற்றி மோட்டர் ஒன்றின் உதவியுடன் இந்த சைக்கிள் இயங்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்பொழுது பொருத்தப்பட்டுள்ள பற்றரிக்கு மேலதிகமாக இன்னொரு பற்றரி பொருத்தினால் சுமார் 50 கிலோ மீற்றர் தூரம் வரை பயணிக்கலாம்.
இருப்பினும், பற்றரியில் மின்சாரம் குறைவடைந்து போனால் பெடல் மூலமும் இந்த சைக்கிளை இயக்க முடியும். பொதுவாக சந்தையில் மின்சார சைக்கிள் ஒன்று 3 இலட்சம் முதல் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
ஆனாலும், நான் ஒரு இலட்சத்திற்கும் குறைவான செலவில் மேற்படி மின்சார சைக்கிளை தயாரித்துள்ளேன். சைக்கிள் ஒன்றை கொடுத்தால் மிகவும் குறைந்த செலவில் மேற்படி மின்சார சைக்கிளை தயாரித்துக் கொடுக்க முடியும்.
பெரியவர்களுக்கு மற்றும் சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் மேற்படி மின்சார சைக்கிளை தயாரிக்க முடியும் எனவும் அப்துல் லதீப் முஹம்மது ரியாஸ் மேலும் தெரிவித்தார்.